காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் தங்கள் குறைகளை நேரடியாக ஆட்சியரிடம் அளிப்பது வழக்கம். கடந்த இரு மாதங்களாகவே நாடாளுமன்ற தேர்தல் நன்னடத்தை விதிகள் கடைபிடிக்கப்பட்டதால் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் நலத்த திட்டங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு நன்னடத்தை விதிகள் அனைத்தும் திரும்பப் பெறுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கட்கிழமை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி அறிவித்திருந்தார்.
கடந்த இரு மாதங்களாக பொதுமக்கள் தங்கள் மனுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பெட்டியில் தங்கள் மனுக்களை செலுத்தி இருந்த நிலையில், பல மனுக்களுக்கு மனுக்கள் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகை சீட்டு கைபேசியில் வரவில்லை என குற்றச்சாட்டு எழுந்து இருந்தது. மக்களுக்கு இன்று முதல் நேரில் அளிக்கலாம் என்ற செய்தி மகிழ்ச்சி அளித்தது. இரு மாதங்களுக்கு பிறகு நடைபெறுவதால் இன்று காலை முதலே மக்கள் தங்கள் மனுக்களை அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருந்தனர்.