செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை, கல்பாக்கம் அடுத்த, வாயலூர் - கடலூர் பகுதி பாலாற்றின் குறுக்கில் கடக்கிறது. ஆற்றைக் கடக்க, 50 ஆண்டுகளுக்கு முன், தரைமட்ட குறுகிய பாலம் கட்டப்பட்டு, போக்குவரத்திற்குப் பயன்பட்டது.
தற்கால போக்குவரத்திற்கேற்ப இல்லாததால், அதைஒட்டி நான்கு வழி உயர்மட்ட பாலம், கடந்த 2016ல் கட்டப்பட்டு, வாகனங்கள் கடக்கின்றன. இதையடுத்து, பழைய பாலம் கைவிடப்பட்டது. விவசாயிகள், அறுவடைக் காலத்தில் பாலத்தில் நெல் உலர்த்துகின்றனர். பெரும்பாலும் குடிமகன்கள் பாலத்தில் முகாமிட்டு மது அருந்தி, குப்பைக் குவிக்கின்றனர். புதிய பாலத்தில் இருசக்கர வாகனப் பயணியர், அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். விபத்தைத் தவிர்க்க, 1 கி.மீ. நீள பழைய பாலத்தின் உறுதித்தன்மையைப் பரிசோதித்து, உறுதியாக இருந்தால் பராமரித்து, இருசக்கர வாகனப் போக்குவரத்திற்கு மட்டும் பயன்படுத்தலாம்.
பாலத்தின் அருகில், தடுப்பணை அமைக்கப்பட்டு, நீர்த்தேக்கம் ரசித்தவாறே, நடைபயிற்சிக்குப் பயன்படுத்தலாம். இங்கிருந்து 3 கி.மீ.இல், அணுசக்தித் துறை கல்பாக்கம் நகரியம் உள்ளதால், அப்பகுதியினர் நடைபயிற்சிக்குச் செல்ல ஆர்வம் காட்டுவர். அதற்கு நெடுஞ்சாலைத்துறை பரிசீலிக்க, இப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.