கச்சிராயபாளையம் அடுத்த தாவடிபட்டு கிராமத்தை கடந்து முக்தா ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த பாலம் கடந்த பருவ மழையின் போது முழுவதும் சேதமானது.
சேதமான பாலத்தின் வழியே இருசக்கர வாகனம் மட்டுமே சென்று வருகிறது. இதில் பள்ளி, கல்லூரி பஸ்கள் மற்றும் லோடு வாகனங்கள் எதுவும் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால் பள்ளி கல்லுாரி மாணவர்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.
மேலும் தாவடிபட்டு, ஷேசமுத்திரம், நெடுமானூர் அதனை சுற்றியுள்ள பகுதிகள் விவசாய நிலங்கள் அதிக அளவில் உள்ளன. இங்கு நெல், கரும்பு, மரவள்ளி, மக்காச்சோளம் போன்ற பல்வேறு பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த விளை பொருட்களை பல கிலோமீட்டர் சுற்றி எடுத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
குறிப்பாக கச்சிராயபாளையத்தில் உள்ள சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை ஏற்றி செல்லும் லோடு வாகனங்கள் 30 கிலோமீட்டர் துாரம் சுற்றி ஆலையை அடைய வேண்டிய நிலை உள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து சேதம் அடைந்த பாலத்தை அகற்றி புதிய மேம்பாலம் அமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.