ஈரோடு மாநகராட்சிக்கு சொந்தமான கனி மார்க்கெட் வணிக வளாகத்தில் 500-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் தற்போது 289 கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த வணிக வளாகத்தில் கடைகளில் உள்ள வியாபாரிகள் சிலர் கடந்த 4 மாதங்களாக வாடகையை செலுத்தவில்லை. இதனால் வாடகை செலுத்த கடந்த மாதம் மாநகராட்சி வருவாய் பிரிவு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியும் வாடகை செலுத்தவில்லை.
இதனால் வாடகை நிலுவைத் தொகையை வசூலிக்க வருவாய் பிரிவு அலுவலர் சிவகுமார் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில் சிவகுமார் தலைமையிலான சிறப்பு குழு கனி மார்க்கெட் வணிக வளாகத்திற்கு சென்றனர். வாடகை பாக்கி வைத்துள்ள வியாபாரிகளிடம் நோட்டீஸ் வழங்கினர். 3 நாட்களில் நிலுவைத் தொகையை செலுத்தாவிட்டால் கடைக்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். இதைப்போல் நேதாஜி வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் 60 கடைகளில் 7 வியாபாரிகள் 5 மாதங்களாக வாடகை செலுத்தவில்லை. அங்கு மாநகராட்சி சிறப்பு குழுவினர் சென்றனர்.