திண்டுக்கல் மாவட்டத்தில் ரோட்டோரங்களில் எரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பதோடு நோய் தொற்றுக்கும் வழிவகுக்கிறது.
தொடரும் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் கிராமம், நகர் பகுதிகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை கடை நடத்துவோர் இரவு நேரங்களில் பைபாஸ்ரோடுகளில் கொண்டு கொட்டுகின்றனர். அருகிலிருக்கும் ஊராட்சிகளும் இதேநிலையை கடைப்பிடிப்பதால் பெரும்பாலான பைபாஸ் ரோட்டோரங்களில் குப்பை மலை போல் குவிந்துள்ளது. அருகில் வசிப்பவர்கள் தீயில் எரிக்கின்றனர்.
பிளாஸ்டிக் குப்பையிலிருந்து வெளிவரும் கரும்புகை அருகிலிருக்கும் குடியிருப்புகள், வாகனங்களில் கடந்து செல்வோர் கண்கள், மூக்குகளில் புகுந்து தொற்றுநோயை பரப்புகிறது.
இதுமட்டுமின்றி வாகன ஓட்டிகள் கண்களில் நெருப்பு துகள்கள் பரவி விபத்துக்களையும் ஏற்படுத்துகிறது. ஒரு கட்டத்திற்கு மேல் தீ அதிகமாக எரிவதை பார்த்து தீயணைப்புத்துறையினர் வந்து அணைக்கும் நிலை தான் தொடர்கிறது. தொடரும் இப்பிரச்னையை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் மவுனமாக கடந்து செல்கின்றனர். இதை சுவாசிப்பதால் ஏற்படும் பிரச்னைகளில் பலரும் சிக்கி பாதிக்கப்படும் நிலைக்கு அதிகாிகள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.