கந்துவட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர் ஒருவர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்நிலையில், சூதாட்டக் கும்பல் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருந்தாளுனராக பணியாற்றிய வந்த பூவழகன் என்பவர், கந்துவட்டி கும்பலால் அவமரியாதை செய்யப்பட்டதால், கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
கந்துவட்டி கும்பலின் அட்டகாசம் பல ஆண்டுகளாகத் தொடரும் நிலையில் அதைக் கட்டுப்படுத்த அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் கந்து வட்டி தடை செய்யப்பட்டுள்ளது. அதை மதிக்காமல் கந்து வட்டி கும்பலுக்கு ஆதரவாக காவல்துறை செயல்படக் கூடாது.
மருந்தாளுனர் பூவழகன் தற்கொலைக்கு காரணமான கந்துவட்டி மற்றும் சூதாட்டக் கும்பலை காவல்துறை கைது செய்து உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும். அவர்களுக்கு ஆதரவளித்த அரசியல் பிரமுகர்கள் மீதும் தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.