சாலிகிராமம், தேவராஜ் நகரைச் சேர்ந்தவர் திருமுருகன், 43. இவர், கடந்த 10 ஆண்டுகளாக சாலிகிராமம் தசரதபுரம் பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.
இவரது முதல் மனைவி மஞ்சுளா, 38; இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், தன் அக்கா மகள் புஷ்பா, 38, என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
புஷ்பாவிற்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இரு மனைவியரையும், தேவராஜ் நகரில் இரு வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்க வைத்து, திருமுருகன் குடும்பம் நடத்தி வந்தார்.
திருமுருகனின் மது அருந்தும் பழக்கத்தால், இரண்டாவது மனைவி புஷ்பாவிற்கும் திருமுருகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
வழக்கம்போல, நேற்று முன்தினம் மாலை சண்டை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சாலிகிராமம் காந்தி நகர், நாராயணன் தெருவில் உள்ள தாய் வீட்டிற்கு திருமுருகன் சென்றார்.
அங்கும் புஷ்பா பின்தொடர்ந்து சென்று சண்டையிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திருமுருகன், கத்தியை எடுத்து புஷ்பாவின் கழுத்தில் குத்தி விட்டு, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
அங்கிருந்தோர் ரத்த வெள்ளத்தில் சரிந்த புஷ்பாவை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் உயிரிழந்தார்.