சென்னை உட்பட தமிழகம் முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கடற்கரை, நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் பண்ணை வீடுகளில் குவிந்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் உட்பட அனைத்துதரப்பு மக்களும் உற்சாகமாக புத்தாண்டை வரவேற்றனர். புத்தாண்டையொட்டி அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ஆங்கிலப் புத்தாண்டு ‘2024’ இன்று பிறந்துள்ளது. இதையொட்டி, சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று இரவு முதலே புத்தாண்டுக் கொண்டாட்டம் களைகட்டியது.
சென்னை மெரினா, பெசன்ட் நகர், பாலவாக்கம், நீலாங்கரை உட்பட சென்னையில் உள்ள முக்கியமான அனைத்து கடற்கரைகளிலும் குழந்தைகள், இளைஞர்கள், இளம்பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். இளைஞர்கள் இருசக்கர வாகனங்களிலும், கார்களிலும் சாலைகளில் உற்சாகமாக வலம் வந்தனர். நள்ளிரவு 12 மணிக்கு உற்சாகமாக ஒரே குரலில் ’ஹேப்பி நியூஇயர்’ என அனைவரும் உற்சாக முழக்கமிட்டனர். மேலும், கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர் ஊட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.