விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்ட தொழிலாளி படுகாயம்.
விருதுநகர் அருகே அரசகுடும்பன்பட்டியில் கனகபிரபு என்பவருக்கு சொந்தமான சுப்ரீம் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. வழக்கம்போல் இங்கு 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தி பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சிறுவர்கள் வெடித்து மகிழும் புஸ்வானம் பட்டாசு தயாரிக்கும் அறையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் புஸ்வானம் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த குல்லூர்சந்தையை சேர்ந்த சங்கிலி 50, என்ற தொழிலாளி பலத்த காயமடைந்தார். அவரை மீட்ட சக தொழிலாளர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர் 95 சதவீத தீக்காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் அறிந்து சென்ற தீயணைப்புத் துறையினர் அடுத்தடுத்த அறைகளில் தீ பரவாமல் தீயை கட்டுப்படுத்தினர். ரசாயன மூலப்பொருட்களின் உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படும் நிலையில் விபத்து குறித்து ஆலை போர்மேன் சாந்த குமாரை ஆலையிலிருந்து கைது செய்து அழைத்து சென்ற சூலக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.