சிவகாசி அருகேயுள்ள மீனாட்சிகாலனியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி(31) இவரும் சுந்தரேஸ்வரி(28) என்ற இளம்பெண்ணும் கடந்த 2018ல் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். 5 வயது ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த 4 மாதங்களாக சுந்தரேஸ்வரி இன்ஸ்டாகிராம் என்ற சமூக வலைதளத்தில் கணக்கு தொடங்கி அதில் தனது நேரத்தை செலவழித்து வந்துள்ளார். இதனை சுந்தரமூர்த்தி கண்டித்துள்ளார்.
இதனால் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இரவு வீட்டில் அனைவரும் தூங்கச் சென்றனர். காலையில் எழுந்து பார்த்தபோது தனது அருகில் படுத்திருந்த மனைவி, குழந்தை இருவரும் காணாமல் போனதைக் கண்டு சுந்தரமூர்த்தி அதிர்ச்சி அடைந்தார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசில் சுந்தரமூர்த்தி புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தாய், மகனை தேடி வருகின்றனர்.