பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநருக்கான கலந்தாய்வினை உடனே நடத்த கோரி தேர்வில் தேர்ச்சி பெற்ற விருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
2023-2024ஆம் ஆண்டிற்கான தமிழக அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 3192 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஆணையினை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வுவாரியம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிட்டது.
இதற்கான தேர்வு கடந்த பிப்ரவரி 4- ஆம் தேதி நடைபெற்றது. தேர்வு முடிவுகள் மே மாதம்வெளியிடப்பட்டது.
இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கலந்தாய்வு நடைபெற்று பணி ஆணையும் வழங்கப்பட்டது. ஆனால் மாநிலம் முழுவதும் 2, 850 பேருக்கு கலந்தாய்வு நடைபெறவில்லை.
இதில் விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 90 பேர் உள்ளனர்.
இது குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் மனு அளித்தனர்
உத்தேச தேர்வுப்பட்டியல் வெளியிட்டு நான்கு மாதங்களுக்கு மேலாகியும் இதுநாள் வரை கலந்தாய்வு நடைபெறவில்லை. இதனை நம்பி தனியார் பள்ளியில் வேலை பார்த்த வேலையினை விட்டு விட்டனர் என அவர்கள் தெரிவித்தனர்.
எனவே குடும்ப வாழ்வாதாரம் கருதி எங்களுக்கு பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநருக்கான கலந்தாய்வினை உடனே நடத்து வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.