விருதுநகர்
அய்யனார் நகரை சேர்ந்தவர் மாரிக்கனி 25. இவர் தனியார் நூற்பாலையில் பணியாற்றி வரும் நிலையில் நேற்று வழக்கம்போல் பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அய்யனார் நகர் தேவர் சிலை அருகே மாரிக்கனியை வழிமறித்த அதே பகுதியை சேர்ந்த சிவா என்ற பிரியதர்ஷன் 21, செல்வமணி 20, ஆனந்த் 19 ஆகிய 3 பேரும் சேர்ந்து அவரை சரமாரியாக தாக்கி தரையில் போட்டு மிதித்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். சாலையில் சென்ற இளைஞர் மீது 3 பேர் சேர்ந்து கொலை வெறி தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் இந்த இளைஞர்கள் கஞ்சா போதையில் ஏராளமானோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளதும் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததுமே இதுபோன்ற கஞ்சா போதை ஆசாமிகளின் அடாவடிக்கு காரணம் என இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து மாரிக்கனி அளித்த புகாரியில் மூன்று பேரையும் கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த மூவர் மீதும் பத்துக்கும் மேற்பட்ட அடிதடி வழிப்பறி உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கஞ்சா போதை இளைஞர்கள் சாலையில் செல்வோரை வழிமறித்து தாக்கும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் விருதுநகர் பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்