விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் உள்ள தண்டியனேந்தல் கிராமத்தில் மொத்தம் 1. 76. 0 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ள கிரானைட் கற்களை வெட்டியெடுக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இப்பகுதியில் நீரோடை அமைந்துள்ளதாலும், பொதுமக்கள் பயன்படுத்தும் பகுதியில் கனிம சுரங்கம் அமைக்கக் கூடாது என கிராம மக்கள் தமிழ்நாடு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதையடுத்து பாதிப்பு ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மக்களுக்கு உறுதி அளித்தார்.
இதற்கிடையே கிரானைட் குவாரி உரிமத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொதுமக்களின் எதிர்ப்பை கருத்தில் கொண்டு கிரானைட் குவாரி பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், மனு அளித்த 10 நாட்களில் நடவடிக்கை எடுக்க வகை செய்த அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.