விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருள்மிகு ஸ்ரீதிருமேனிநாதர் கோவிலில் மஹா சனிப் பிரதோஷ விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 14 சிவத் திருத்தலங்களில்
11வது திருத்தலமும், மகான் ரமணமகரிஷி பிறந்த புண்ணிய பூமியான திருச்சுழியில் அருள்பாலித்துள்ள துணைமாலை அம்மன் சமேத ஸ்ரீ திருமேனிநாதர் கோவிலில் பிரதோஷத்தை மஹா சனிப் பிரதோஷத்தை முன்னிட்டு பல்வேறு வகையான சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பிரதோஷம் அன்று சிவாலயங்களுக்கு சென்று தம்மால் இயன்ற அபிஷேகப் பொருட்களை அளித்து அபிஷேகம் செய்து நந்தி பெருமானை வழிபட சிவபெருமானின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பதும், அன்றைய தினம் நந்திக்கும், சிவபெருமானுக்கும் வில்வ மாலை, திராட்சை மாலை அணிவிப்பது நற்பலன்களை தரும் என்பது ஐதீகம்.
இந்நிலையில் திருச்சுழி அருள்மிகு ஸ்ரீ திருமேனிநாதர் கோவிலில் நடைபெற்ற இன்றைய சனிப்பிரதோஷ விழாவில் திருச்சுழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பிரதோஷத்தை முன்னிட்டு கோவிலில் குவிந்தனர்.
நந்தி பெருமானுக்கு பால், சந்தனம், பன்னீர், நெய், தயிர், மஞ்சள் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 11 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து நந்திகேஸ்வரர் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீப தூப ஆராதனை நடைபெற்றது.