விருதுநகர் மாவட்டம், நரிக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கிறிஸ்துமால் நதி பாசனத்தை நம்பியே பெரிதும் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் வைகை ஆற்றில் இருந்து கிறிஸ்துமால் நதிக்கு திறக்கப்படும் தண்ணீரால் இப்பகுதியில் பாசன வசதி பெறுகிறது. இந்த நிலையில் வைகை அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர் விரகனூர் அணைக்கட்டு வழியாக உளுத்திமடை, உச்சனேந்தல், கட்டனூர், அத்திகுளம், இருஞ்சிறை, உலக்குடி, மானூர், நரிக்குடி, மறையூர் உட்பட கிறிஸ்துமால் பாசனம் பெறும் 46 கண்மாய்களும் நிறைந்து கடைசியாக வீரசோழன் கண்மாய்க்கு சுமார் 60 கிலோ மீட்டர் தாண்டி வருகை தந்த தண்ணீரை விவசாயிகள் மற்றும் கிராம பொதுமக்கள் மலர் தூவி வரவேற்று மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்தக் கிறிஸ்துமால் நதியில் வரும் தண்ணீரால் சுமார் 15,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். வீரசோழன் கண்மாயில் தண்ணீர் வரப்பெற்றது கழுகு பார்வை காட்சியில் பிரமிப்பை ஏற்படுத்தியது. இந்த தண்ணீரை வரவேற்கும் இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் பஷீர் அகமது மற்றும் வீரசோழன் இஸ்லாமிய உறவின்முறை டிரஸ்ட் போர்டு நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.