விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், தமிழ்நாடு உரிமைகள் திட்டம் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் முன்களப்பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தி மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்களை சேகரிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் அவர்கள் தொடங்கி வைத்தார். விருதுநகர் மாவட்டத்தில் இல்லந்தோறும் சென்று அனைத்து வகை மாற்றுத்திறானாளிகளையும் கண்டறிந்து அவர்களது முழு விவரங்கள் அடங்கிய சமூக தரவு தளத்தை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் நகர்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் முன்களப்பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தி மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்களை சேகரிக்கும் பணி நடைபெறவுள்ளது. கணக்கெடுப்பிற்காக ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட சமூக சேவை வழங்கும் நிறுவனங்கள்(CSPs) மூலம் 182 முன்களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கணக்கெடுப்புப் பணி வருகிற ஆகஸ்டு மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடத்தப்படும் இக்கணக்கெடுப்பிற்காக முன்களப்பணியாளர்களுக்கு பொதுமக்கள் அனைவரும் தகுந்த ஒத்துழைப்பு அளித்து கணக்கெடுப்புப் பணி சிறப்பாக நடைபெற உதவுமாறு ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்தார்.