ஸ்ரீவி: தேரோட்ட திருவிழாவில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

65பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்துார் அருகே வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோவில் தேரோட்டம். ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் அருகே உள்ள வத்திராயிருப்பு பகுதியில் புகழ்பெற்ற முத்தாலம்மன் கோவில் தேரோட்ட திருவிழா வெகு சிறப்பாக நடந்தது. இந்த தேரோட்ட திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். வத்திராயிருப்பு பகுதி நீர் வளம், நிலவளம் மிகுந்து செழிப்புடன் இருக்க காரணம் வத்திராயிருப்பில் எழுந்தருளியுள்ள மலைக்கு அதிபதியான முத்தாலம்மன் தான் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை. அதற்காக ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம், விழா எடுத்து இப்பகுதி மக்கள் வழிபடுவது வழக்கம் அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த அக் 8ஆம் தேதி அன்று காலை கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. ஆறு நாட்கள் நடந்த விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக அதிகாலையில் முத்தாலம்மன் திருத்தேரில் எழுந்தருளிய, அவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தேரோட்டம் துவங்கியது. தேர் நான்கு ரத வீதிகள் வழியாக சுற்றி வந்து நிலைக்கு வந்து சேர்ந்தது. பக்தர்கள் மேளதாளங்கள் முழங்க அம்மனை ஊர்வலமாக எடுத்துச் சென்று கோவிலில் எழுந்தருளச் செய்தனர். வத்திராயிருப்பு சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள் செய்தனர்.

தொடர்புடைய செய்தி