விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு ஒன்றியம் கூமாபட்டியை சேர்ந்த முத்துக்குமார் (26). வாகன ஓட்டுனரான முத்துக்குமாரை நேற்று முன்தினம்(செப்.30) மாலை தோப்பில் வைத்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் தப்பி ஓடிய நிலையில் நேற்று(அக்.1) காலை கந்தகுமார், மாரீஸ்வரன் என்ற இருவரை கைது செய்த கூமாபட்டி காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து அரசு மருத்துவமனையில் இருந்து முத்துக்குமாரின் உடலை வாங்க மறுத்த அவரது உறவினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் முத்துகுமாரின் உடலை பெற்று உறவினர்கள் இறுதிச் சடங்கு செய்வதற்காக ஊர்வலமாக எடுத்துச்சென்ற போது இறுதி ஊர்வலம் செல்லும் வழியில் உள்ள கடைகளை ஊர்வலத்தில் சென்றவர்கள் அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது.
மேலும் தகராறு மற்றும் கல்வீச்சில் வத்திராயிருப்பு காவல் ஆய்வாளர் மாரியப்பன் படுகாயம் அடைந்தார். காவல் ஆய்வாளர் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.