ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள இராக்காச்சி அம்மன் கோயில் நேற்று மாலை ஆற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கிய 40 பெண்கள் உட்பட 150 பேரை 3 மணி நேர போராடி தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் செண்பகத் தோப்பு பகுதியில் இராக்காச்சி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் அருகே காட்டாறு ஓடுகிறது. மலைப்பகுதியில் நேற்று மாலை நேரத்தில் பெய்த கன மழை காரணமாக ஆற்றில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. விடுமுறை தினம் என்பதால் குடும்பத்துடன் ஆற்றின் முனை பகுதியில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் உடனடியாக மேல் ஏறி கோயிலில் தஞ்சம் புகுந்தனர்.
ஆனால் மீன்கொத்தி பாறை பகுதியில் குளித்துக் கொண்டிருந்த சிவகாசி, ராஜபாளையம், சத்திரப்பட்டி, சுற்று பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்டோர் ஆற்றின் மறு கரையில் சிக்கிக் கொண்டனர். அந்த இடத்தில் தங்குவதற்கு இடம் இல்லாத நிலையில் மழையில் நனைந்தவாறு காத்திருந்தனர். இது குறித்து தகவல் கிடைத்தவுடன் ராஜபாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் 20 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று ஆற்றின் மரகரையில் கயிறுகளை கட்டி ஆண்கள், பெண்கள் என சிக்கிய அனைவரையும் கொட்டும் மழையில் பத்திரமாக மீட்டனர்.