விருதுநகர் மாவட்டம், பொதிகை எக்ஸ்பிரஸில் ஏசி பெட்டிகளை அதிகரித்து சாதாரண பெட்டிகள் குறைப்பு, அதிருப்தியில் பயணிகள். மேலும் சாதாரண படுக்கை வசதி பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என ரயில் பயணிகள் வலியுறுத்தி உள்ளனர். சென்னை - செங்கோட்டை இடையே பொதிகைஎக்ஸ்பிரஸ்(12661/-12662) ரயில்கள் மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் வழியாக கடந்த செப். 2004 முதல் இயக்கப்படுகிறது.
தொடர்ந்து அதிக பயணிகளுடன் இயக்கப்படும் இந்த ரயில்களில் முன்பதிவு தொடங்கிய வேகத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு சென்று விடும். மேலும் இந்த ரயிலில் முதல் வகுப்பு ஏசி 1, இரண்டாம் வகுப்பு ஏசி 2, மூன்றாம் வகுப்பு ஏசி 5, சாதாரணப்படுக்கை முன்பதிவு பெட்டிகள் 8, முன்பதிவு இல்லாத பெட்டிகள் 4 உட்பட மொத்தம் 22 பெட்டிகளுடன் இயங்குகின்றன.
இந்நிலையில் தெற்கு ரயில்வே ரயிலில் சாதாரண படுக்கை பெட்டி எண்ணிக்கை ஒன்றை குறைத்து, ஏசி பெட்டி ஒன்றை அதிகரிக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தென் மாவட்ட மக்கள் சாதாரண பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென வலியுறுத்தி வரும் நிலையில் அதற்கு மாறாக குறைத்து மூன்று மடங்கு கட்டணம் அதிகம் உள்ள ஏசி பெட்டி இணைப்பு வேதனையளிப்பதாக பயணிகள் தெரிவித்தனர்.
மேலும் சிலம்பு எக்ஸ்பிரஸ் 23 பெட்டிகளுடன் இயக்கப்படுவது போல பொதிகை ரயிலிலும் 23 பெட்டிகளாக அதிகரிக்க வேண்டுமென பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.