விருதுநகர் மாவட்டம், குடும்ப பிரச்சினையில் மனைவி, மாமியாரை கொல்ல முயன்றவருக்கு 10 ஆண்டு சிறை. ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.
காரியாபட்டி பகுதியைச் சேர்ந்தவர் முகமது முஸ்தபா (வயது 40) இவர் காதல் திருமணம் செய்துள்ளார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் இவர் சரிவர வேலைக்குச் செல்லாமல் வீட்டில் மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு இவர் வேலைக்குச் செல்லாதது தொடர்பாக வீட்டில் பிரச்சினை ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக அவரது மாமியார் சத்தம் போட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த முகமது முஸ்தபா, அவரது மாமியார் மற்றும் மனைவி, இரண்டு குழந்தைகளைக் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயற்சி செய்ததுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காரியாபட்டி போலீசார் முகமது முஸ்தபாவைக் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கைவிசாரித்த நீதிபதி பகவதி அம்மாள், காதல் திருமணம் செய்த மனைவி, மாமியார், 2 குழந்தைகளைக் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயற்சி செய்த முகமது முஸ்தபாவிற்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.21 ஆயிரம் அபராதம் விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளார்.