ஸ்ரீவில்லிபுத்தூரில் பொது மக்களை கவர்ந்த வித்தியாசமான பிளக்ஸ் பேனர். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வெளியூர் செல்லும் வீடுகளை கண்காணித்து வீட்டை உடைத்து தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்றன.
இந்நிலையில் தற்போது அரையாண்டு, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை என விடுமுறை நாட்கள் வருவதை முன்னிட்டு பொது மக்கள் சுற்றுலா தலங்கள் செல்ல திட்டமிட்டு இருப்பார்கள். மேலும் வெளியூர் செல்லும் மக்களின் வீட்டை கண்காணித்து பூட்டிய வீடுகளில் திருட்டு சம்பவத்தை தடுக்கவும், பொதுமக்களுக்கு எளிதில் தெரியும் வகையிலும், அதே போல் சொல்லும் விஷயம் சுவாரஸ்யமாக இருக்க வேண்டுமென்ற காவல்துறை சார்பில் பல்வேறு இடங்களில் திரைப்பட நகைச்சுவை நடிகர் வடிவேலு காமெடியை முன்னிறுத்தி விளம்பர பிளக்ஸ் பேனர்களை வைத்துள்ளனர்.
அதில் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்லும் பொதுமக்கள் முன்னதாக காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தெரிவித்தால் அப்பகுதியில் ரோந்து பணிகளை அதிகப்படுத்த காவல்துறையினர் திட்டமிட்டு உள்ளனர். வித்தியாசமான முறையில் விளம்பரம் செய்து வியாபாரத்தை பெருக்கி வரும் வியாபார நிறுவனங்கள் மத்தியில் காவல்துறையினரின் இம்மாதிரியான வித்தியாசமான பிளக்ஸ் போர்டு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.