விருதுநகர் மாவட்டம், சிவகாசி பசுமை மன்றத்தினர், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து சிவகாசி பகுதியில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி, அவற்றில் மரக்கன்றுகள் நடவு செய்வது உள்ளிட்ட நீர்நிலைகளை பாதுகாக்கும் சேவை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக 2025 புத்தாண்டை முன்னிட்டு இன்று சிவகாசி பெரியகுளம் கண்மாயின் மேற்கு கரையில் 2025 மரக்கன்றுகள் நடவு செய்து மரம் நடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் மரக்கன்றுகள் நட்டதுடன் மரக்கன்றுகளை பாதுகாக்கும் வகையில் முள்வேலிகள் மற்றும் சொட்டுநீர் பாசன வசதிகள் செய்யப்பட்டன. இந்நிகழ்வில் சிவகாசி வர்த்தக சங்கம், தமிழ்நாடு காலண்டர் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் சிவகாசி டவுன் ஆகிய அமைப்புகள் தங்களை இணைத்துக்கொண்டன. மேலும் கடந்த 2024 ஆம் ஆண்டு 1 லட்சம் மரம் நடவேண்டும் என்ற இலக்குடன் துவங்கி, சுமார் 86,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு சுமார் 2 லட்சம் மரக்கன்றுகள் நடும் இலக்குடன் புத்தாண்டை முன்னிட்டு இன்று 2025 மரக்கன்றுகளை நடவு செய்து மரம் நடும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.