சிவகாசி: மனைவியை கத்தியால் குத்திய கணவர் விஷமருந்தி தற்கொலை

1523பார்த்தது
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே பாரைப்பட்டியை சேர்ந்தவர் கணேசன் மகன் பாலமுருகன்(33). இவருக்கும் பெத்தம்மாள் என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் முடிந்து 2 பெண் பிள்ளைகள் உள்ளனர்.

கணவன் மனைவி 2 பேரும் அச்சகத்தில் வேலை செய்து வந்துள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு பிரிந்து தனது குழந்தைகளுடன் நாரணாபுரம் புதூரிலுள்ள தாய் வீட்டில் பெத்தம்மாள் வசித்தார்.

சம்பவத்தன்று சிவகாமிபுரம் - பாரைப்பட்டி ரோட்டில் பெத்தம்மாள் நடந்து சென்ற போது அங்கு வந்து அவரை வழிமறித்த பாலமுருகன், மனைவியிடம் தகராறு செய்து கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த பெத்தம்மாள் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மனைவியை கத்தியால் குத்துவதற்கு முன்னர் பாலமுருகன் துத்தநாகம் என்ற விஷத்தை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

ஆபத்தான நிலையில் சிவகாசி அரசு மருத்துவமனையில் பாலமுருகனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த பாலமுருகன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you