சிவகாசி அருகே தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகே தீப்பெட்டி அச்சு ஆலையில் திடீரென தீ விபத்து. பல லட்ச மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசம்.
சிவகாசி அம்மன் கோவில்பட்டி தெருவைச் சேர்ந்தவர் கணேஷ். இவருக்கு நாரணபுரம் சாலையில் தீப்பெட்டியின் ஓரங்களில் குச்சிகளை உரசும் வேதிக் கலவையை அச்சடிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு வழக்கம் போல் தொழிலாளர்கள் வேலை செய்து வரும் போது, எதிர்பாரத விதமாக சிவப்பு பாஸ்பரஸ் டின் கீழே சரிந்து விழுந்ததில் தரையில் ஏற்பட்ட உராய்வு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து, அனைத்து தொழிலாளர்களும் அங்கிருந்து வெளியேறினர். சிறிது நேரத்தில் தீ மள, மளவென பரவி ஆலையின் அனைத்துப் பகுதிகளுக்கும் பரவியது. இந்நிலையில், அக்கம் பக்கத்தினர், தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் பல லட்ச மதிப்பிலான மூலப் பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. மேலும் இந்த தீ விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.