விருதுநகர் மாவட்டம், விருதுநகரில் அண்மையில் நடந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவிப்பதில் ஏற்பட்ட பிரச்சனையில், முன்னாள் அமைச்சர் மாபா. பாண்டியராஜனின் ஆதரவாளரை ராஜேந்திரபாலாஜி கன்னத்தில் அறைந்தார். இச்சம்பவம் பற்றி கருத்து கூறிய பாண்டியராஜன் விருதுநகர் மாவட்ட அதிமுகவில் ராஜேந்திரபாலாஜி குறுநில மன்னர் போல் செயல்படுவதாக தெரிவித்திருந்தார். அவரது கருத்துக்கு மிரட்டல் தெரிவிக்கும் விதமாக சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் ராஜேந்திரபாலாஜி, பாண்டியராஜனை கடுமையாக விமர்சித்து எச்சரிக்கை விடுத்து பேசினார். இதனிடையே விருதுநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளிடையே காணொளி காட்சி மூலம் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவில் நான் தான் பெரிய ஆள் என ஒரு சிலர் எண்ணி மற்றவர்களோடு மோதல் போக்கை கடைபிடித்து வருவது கட்சிக்கும், அவர்களுக்கும் நல்லதல்ல என்று யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் பேசினார். இதற்கிடையே அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான பாண்டியராஜன் மற்றும் ராஜேந்திரபாலாஜியின் ஆதரவாளர்கள் சார்பாக ஜாதியின் பெயர்களில் ஒருவரை ஒருவர் கண்டித்து எச்சரிக்கை விடும் வகையில் விருதுநகர் மற்றும் சிவகாசி, சாத்துார் வட்டார பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்துயுள்ளது.