சிவகாசியில்'2025'ம் ஆண்டு தினசரி காலண்டர்கள் விற்பனை சுமார் 400 கோடி.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் தினசரி காலண்டர்கள் தயாரிப்பு பணிகள் பிரதானமாக இருந்து வருகிறது. தினசரி காலண்டர் தயாரிப்பில் மட்டும் சுமார் 50க்கும் மேற்பட்ட நிறுவனங்களும், இதை சார்ந்து நூற்றுக்கணக்கான அச்சகங்களும் ஈடுபட்டு வருகின்றன. ஒரு வருடத்தில் 6 மாதங்கள் காலண்டர் அச்சிடும் பணிகள் நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டு அன்று பஞ்சாங்கம் வெளியாகி அடுத்தாண்டிற்கான காலண்டர் தயாரிப்பு பணிகள் தொடங்கி ஆகஸ்ட் மாதத்திலிருந்து, ஜனவரி மாதம் வரை காலண்டர் தயாரிப்பு வெளி மாநிலங்கள், மாவட்டங்களுக்கு அனுப்பும் பணிகளும் தொடர்ந்து நடைபெறும். தமிழ்நாடு மட்டுமல்லாமல் புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்துசிவகாசியில் தயாராகும் காலண்டர்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தன. இந்தாண்டு காலண்டர் தயாரிப்பு பணிகள் துவங்கியதிலிருந்தே விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. சுமார் 90 சதவிகித ஆர்டர்களுக்கான காலண்டர்கள் தயாரித்து முடிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்பட்டன. இந்தாண்டு காலண்டர்கள் விற்பனை சுமார் 400 கோடி ரூபாயை கடந்துள்ளது என காலண்டர் தயாரிப்பு சங்க நிர்வாகிகள் தகவல் தெரிவித்தனர். கடந்தாண்டை விட விற்பனை சற்று அதிகமாகவே இருந்தது என தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியுடன் கூறினர்.