விருதுநகர் மாவட்டம், சிவகாசி SHNV ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் இரண்டு நாட்கள் 'சுவையுடன் சிவகாசி 2024' என்ற தலைப்பில் ஆடல், பாடலுடன் கூடிய உணவு திருவிழா விமர்சையாக நடைபெற்றது. அரையாண்டு பள்ளி விடுமுறை நாளையொட்டி மாவட்டத்தில் முதல் முறையாக "சுவையுடன் சிவகாசி" உணவு திருவிழா வெகு விமர்சையாக இரண்டு நாட்கள் நடைபெற்றது.
உணவுத் திருவிழாவில் பிரபலமான துருக்கி டார்கிஸ் ஐஸ்கிரீம், கேரளாவின் குலுக்கி சர்பத், தமிழகத்தின் பாரம்பரிய மண்பானை சமையல், இயற்கை உணவுகள், தென்னிந்திய, வடஇந்திய மற்றும் சைனீஸ் உணவுகள், பிரியாணி, சாட் மசாலா வகைகள், பல்வேறு வகையான ஃப்ரூட் சாலட் ஜூஸ், ஆவின், வேளாண்மை விற்பனை மையம் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழு தயாரித்த உணவு வகைகள் என மொத்தம் 54 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
உணவுத் திருவிழாவில் குழந்தைகள் பொழுதுபோக்கிற்காக பல அரங்குகளில் ஓவியம் வரைதல், பாரம்பரிய மண்பானை செய்தல், மாட்டுவண்டிகள் முன்பாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் செல்போனில் செல்ஃபி எடுத்துக்கொண்டு மகிழ்ந்தனர். மேலும், பொழுதுபோக்கு அம்சமாக பல்வேறு ஆடல் பாடல் கலைநிகழ்ச்சிகள் மற்றும் இசைநிகழ்ச்சி, பரதநாட்டியம், சிலம்பம், நடனம், யோகா, பறைஇசை, மேஜிக் ஷோ உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.