சிவகாசி அடுத்த சித்தூராஜபுரம் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (60). இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை மைப்பாறை கிராமத்தில் செயல்பட்டு வந்தது. கடந்த ஆண்டு ஆலையில் ஏற்பட்ட விபத்தை தொடர்ந்து, தொழிலாளர் நலத்துறை மற்றும் சுகாதாரத்துறை துணை இயக்குநர் ஆகியோர் ஆலையை ஆய்வு செய்து பட்டாசு ஆலை இயங்க தடை விதித்தனர். இந்நிலையில் தற்போது தடையை மீறி பட்டாசு ஆலை செயல்படுவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மைப்பாறை வீ.ஏ.ஓ சங்கர், கிராம உதவியாளர் செல்லத்துரை ஆகியோர் நேற்று மார்ச் 13 பட்டாசு ஆலையை நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது ஆலையில் பட்டாசு தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து மைப்பாறை வீ.ஏ.ஓ சங்கர், போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டாசு ஆலை உரிமையாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் ஆலை மேற்பார்வையாளர்கள் சிவகாசி தெற்கு ஆனைக்குட்டம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த அதிரூபன், சிவகாசி வடமலாபுரத்தைச் சேர்ந்த தாமோதரன் மகன் கோகுல்நாத் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.