விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் வலையொளி வாயிலாக உரையாற்றினார்.
இந்த நேரலை நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
விருதுநகர் மாவட்டத்தில் 2025-26 ஆம் கல்வியாண்டின் தொடக்கத்தில் உங்கள் அனைவரிடமும் இணைய வழியில் உரையாற்றுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. கல்வி ஒரு அழியாத செல்வம்.
“வெள்ளத்தால் அழியாது வெந்தழலால் வேகாது, வேந்தராலும் கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழியக் குறைபடாது” என்று கல்வியின் உடைய பெருமையை நம் தமிழ் சமூகம் தொடர்ச்சியாக பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உயர்வாகவே கூறுகிறது.
ஏன் இந்த கல்விக்கு இவ்வளவு முக்கியத்துவத்தை தருகிறார்கள், ஏன் எல்லோரும் உயர்கல்வி படிக்க வேண்டும் என்கிறார்கள் என்றால், கல்வியில் அவர்கள் கற்றுக்கொள்வதற்கும் பெற்றுக்கொள்வதற்கும் நிறைய இருக்கின்றது.
இந்த கல்வியாண்டில் தொடக்கத்தில் குறிப்பாக இன்று இந்த இணைய வழியில் இருக்கக்கூடிய 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் எல்லோரும் நீங்கள் கல்வியின் உடைய மிக முக்கியமான கட்டத்தை அடைந்திருக்கிறீர்கள்.