ராஜபாளையம் அருகே புத்தூரில் வீடு நுழைந்து கணவன், மனைவியை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்.விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அடுத்த புத்தூர் கிராமத்தில் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு காலனி பகுதியில் பேனர் வைக்கப்பட்டிருந்தது.
அந்த வழியாக புத்தூர் தெற்கு தெருவைச் சேர்ந்த கருமலை பாண்டியன் என்பவர் தனது வீட்டிற்குக் காரை பேனரில் உரசாமல் மெதுவாக ஓட்டிச் சென்று விட்டார். அது சமயம் பேனரில் உரசியதாக கூறி மர்ம நபர்கள் இரவில் கருமலை பாண்டியன் இருந்த வீட்டிற்குச் சென்று கருமலை பாண்டியன் மற்றும் அவரது மனைவி வித்யா இருவரையும் மர்ம நபர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.
அதைத் தட்டிக் கேட்ட பக்கத்து வீட்டுக்காரர்கள் முத்துராமன், தமிழ்ச்செல்வி ஆகிய இருவரையும் அடித்து உதைத்து காயப்படுத்தியதாக தெரிகிறது. இவர்கள் 4 பேரும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து தளவாய்புரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதுவரை யாரையும் கைது செய்யாமல் காவல்துறையினர் மெத்தனம் காட்டியதாக கூறி, ஆத்திரமடைந்த புத்தூர் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் குற்றவாளிகளைக் கைது செய்ய கோரி சாலை மறியல் செய்தனர். தகவல் அறிந்த தளவாய்புரம் போலீசார் விரைந்து வந்து சமரசம் செய்து விரைவில் கைது செய்வோம் என்று உறுதியளித்தனர்.