இராஜபாளையம் அருகே தொடரும் ஆற்று மணல் திருட்டு கண்டுகொள்ளாத அதிகாரிகள்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் ஆதிபுத்திர அய்யனார் கோயில் பின்புறம் உள்ள ஆற்றில் இருந்து மணல் திருட்டு எவ்வித தடையும் இன்றி நடைபெற்று வருவது குறித்து விவசாயிகள் வேதனையில் உள்ளனர். இதை அறிந்தும் போலீசாரும், வருவாய்துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். சேத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் ஆதிபுத்திர அய்யனார் கோயில் பின்புறம் ஆற்றில் நீர்வரத்து உள்ளது. முன்பு மலையில் இருந்து இயற்கையாகவே அடித்து வரப்படும் மணல் தேக்கமாகி விவசாய நிலங்களில் நிலத்தடி நீருக்கு காரணமாக இருந்து வந்தது.
மேலும் மணல் தேவை, விலை அதிகரிப்பின் காரணமாக பதிவு எண் இல்லாத வாகனங்கள் மூலம் மணலை ஆற்றில் இருந்து அள்ளி கட்டடப்பகுதிகளுக்கு கொண்டு செல்லும் பணியில் இப்பகுதியை சேர்ந்த சிலர் ஈடுபட்டனர். நாளடைவில் அதிக லாபம் தரும் தொழிலாக மாறியதால் அதிகாரிகளை கவனித்து தடை இன்றி தினசரி செய்ய தொடங்கியுள்ளனர். இதன் மூலம் காலை, மாலை என வாகனங்கள் மூலம் தலா ஐந்து மூடை மண்ணை அள்ளி கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.