விருதுநகரில் வழக்கறிஞர்கள் மத்திய அரசு திருத்தி அமைத்துள்ள மூன்று புதிய சட்டங்களை வாபஸ் பெற கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றை சமஸ்கிருத மொழியிலும், இந்தி மொழியிலும் மாற்றம் செய்வதற்கான சட்ட மசோதாவை மத்திய அரசு யாருடைய அனுமதியும் இல்லாமல் நிறைவேற்றியதை கண்டித்து வழக்கறிஞர்கள் பல்வேறு கட்டங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சட்டத் திருத்தங்களால் வழக்கறிஞர்கள் மட்டுமின்றி, பொது மக்களும் பாதிக்கப்படும் வகையில் காவல் துறையினருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப் பட்டுள்ளதாக வழக்கறிஞர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
எனவே சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி விருதுநகர் ரயில் நிலையம் முன்பு 30க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் ஆண், பெண் வழக்கறிஞர்கள் கலைந்து சென்றனர். கண்டன ஆர்ப்பாட்டத்தை தாமதமாக தொடங்கிய வழக்கறிஞர்களால் காவலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் நீண்ட நேரமாக காத்திருந்து கடும் அவதி அடைந்தனர்.