அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி ஸ்ரீ வேணுகோபாலசாமி வைகாசி வசந்த விழா தேரோட்டம் ஏழு ஆண்டுகளுக்கு பின் வெகு விமர்சையாக நடைபெற்றது
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு
ஸ்ரீவேணுகோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது. திருக்கோவிலில் வைகாசி வசந்த விழா கடந்த ஜூன் 1 தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வைகாசி வசந்த விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. தேர் பழுது காரணமாக கடந்த ஏழு ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது. இந்த தேர் புதிதாக கட்டப்பட்டு கடந்த ஆண்டு வெள்ளோட்டம் நடைபெற்ற நிலையில் 7 ஆண்டுகளுக்கு பின் தற்போது வைகாசி வசந்த விழாவில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. வேணுகோபால சுவாமி சத்தியபாமா, ருக்மணியுடன் திருத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த சிறப்பு வாய்ந்த தேரோட்டத்தை பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா பக்தி கோஷங்கள் முழங்க தேரோடும் வீதிகளில் தேரோட்டம் நடைபெற்றது. வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்த ஸ்ரீ வேணுகோபால சுவாமியை வழிபட்டு மகிழ்ந்தனர்.