விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டியை சேர்ந்தவர் பாண்டியராஜன் - ஈஸ்வரி தம்பதியர் மகன் யோகேஸ்வரன் (18). பாண்டியராஜன் - ஈஸ்வரி இருவரும் கூலி வேலை செய்து யோகேஸ்வரன் உடன் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். யோகேஸ்வரன் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பிஏ படித்து வருகிறார்.
பளு தூக்கும் போட்டியில் ஆர்வம் கொண்ட யோகேஸ்வரன் மூன்று ஆண்டுகளாக அதற்காக சிறப்பு பயிற்சி மேற்கொண்டு வருகிறார். உடலை வலுப்படுத்தி தினந்தோறும் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று உடலை வலுப்படுத்தி பல்வேறு பளு தூக்கும் போட்டிகளில் அவர் பங்கேற்று உள்ளார். இந்த மூன்று ஆண்டுகளில் வட்டார அளவிலான, மாவட்ட அளவிலான, மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று யோகேஸ்வரன் பல்வேறு கோப்பைகள் மற்றும் பதக்கங்கள், சான்றிதழ்களை வென்றுள்ளார்.
கடைசியாக கடந்த 5ஆம் தேதி ஹரியானாவில் நடைபெற்ற தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் தமிழ்நாடு அணியில் இடம் பெற்று 90 கிலோ சப் ஜூனியர் பிரிவில் 195 கிலோ எடையை தூக்கி வெண்கலப் பதக்கம் என்ற சாதனையை படைத்துள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்த பல்வேறு போட்டிகளில் பங்கேற்று ஆசிய அளவிலான போட்டிகள் மற்றும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை தேடித்தர வேண்டும் என்றும் தங்களைப் போன்ற வீரர்களுக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என்றும் யோகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.