விழுப்புரம் நகரில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டி, நேற்று நள்ளிரவு 12.00 மணிக்கு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதையொட்டி, கிறிஸ்துவ பொதுமக்கள் பலரும் தங்களின் குடும்பங்களோடு வந்து சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றனர். சர்ச் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில் உள்ள கிறிஸ்து அரசர் தேவாலயத்திற்கு வந்த கிறிஸ்துவ பொதுமக்களிடம் கஞ்சா போதையில் இருந்த இரு இளைஞர்கள், ஆடியபடி ரகளை செய்தனர்.
சிறப்பு திருப்பலி முடியும் தருவாயில், இந்த தேவாலயம் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லாததால், போதை இளைஞர்கள் எழுந்திருக்க கூட முடியாமல் ஆட்டம் போட்டு, அசிங்கமான வார்த்தைகளால் திட்டிக் கொண்டும் இருந்தனர். இதனால், தேவாலயத்தில் இருந்து வெளியே வந்த கிறிஸ்துவ பொதுமக்கள் பலரும் தங்களின் காதுகளை மூடிக் கொண்டு சென்றனர்.
இதே போல், கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள தேவாலயம் அருகிலும், கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள தேவாலயம் அருகிலும், கஞ்சா போதையில் இளைஞர்கள் சிலர் சுவாமியை வழிபட்டு சென்ற பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் விழுப்புரம் நகரில் உள்ள சில தேவாலயங்கள் அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.