விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம்
பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற பெருந்தேவி தாயார் சமேத ஆனந்த வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் புரட்டாசி மாத உற்சவம் நடைபெற்று வருகின்றன. விழாவையொட்டி நேற்று
முன்தினம் மாலை திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள
துர்க்கை நாகமுத்து மாரியம்மன் கோவிலில் இருந்து ஏராளமான பெண்கள், இளைஞர்கள்
குடும்பத்துடன் மலர்கள், பழங்கள், இனிப்பு வகைகள், வேட்டி- சேலை, மஞ்சள், வளையல் மாங்கல்யம் உள்ளிட்டவைகளை சீர்வரிசையாக
எடுத்து ஊர்வலமாக கொண்டு வந்து திருக்கல்யாண உற்சவத்தில் கலந்துகொண்டனர்.
பின்னர் கோவில் முன்பு அலங்கரிக்கப்பட்டிருந்த
மேடையில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆனந்த வரதராஜ பெருமாள் எழுந்தருள மேளதாளங்கள்
முழங்க, வேத மந்திரங்கள் ஓத, பக்தர்களின் கோவிந்தா. கோவிந்தா. என்ற பக்தி கோஷங்களுக்கு இடையே ஆனந்த வரதராஜ பெருமாளின் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவியுடன் ராஜஅலங்காரத்தில் மூலவரான ஆனந்த வரதராஜபெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அப்போது பெருமாளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள்
கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் நாட்டியாஞ்சலி குழுவினர் மற்றும் பள்ளி
மாணவர்கள் கலந்துகொண்ட நாட்டிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.