வளவனுார் அருகே குப்பை கிடங்கை விரிவாக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் டீசல் கேனோடு போராடியதால் பரபரப்பு நிலவியது.
வளவனுார் பேரூராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை, மக்காத குப்பையை தனித்தனியாக பிரித்தெடுக்கும் மையம் மேல்குமாரக்குப்பம் கிராமத்தில் இயங்கி வருகிறது.
இந்த மையத்தை விரிவாக்கம் செய்ய கடந்த 2023ம் ஆண்டு ரூ. 35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, விரவாக்கி பணிகள் துவங்கியது. உடன் அப்பகுதி மக்கள் குப்பை கிடங்கில் துர்நாற்றம் வீசுவதாகவும், தொற்று நோய் மற்றும் தோல் நோய் வருவதாக கூறி போராட்டம் நடத்தினர். இதனால், விரிவாக்க பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, நேற்று மீண்டும் பேரூராட்சி சார்பில் குப்பை கிடங்கு விரிவுபடுத்தும் பணி துவங்கியது. அதனையறிந்த கிராம மக்கள் திரண்டு வந்து விரிவாக்க பணியை தடுத்து நிறுத்தி போராட்டம் செய்ததோடு, அங்கிருந்த அதிகாரிகளோடு வாக்குவாதம் செய்தனர்.
தகவலறிந்த வளவனுார் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பெண்கள் சிலர் டீசல் கேனோடு வந்து விரிவாக்க பணியை நிறுத்தாவிட்டால் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டினர்.
அவர்களிடம் இருந்து டீசல் கேனை போலீசார் பறிமுதல் செய்து சமாதானம் செய்தனர்.