விழுப்புரம் வட்டம், வளவனூா், பாலாஜி நகா் 4-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்த ஏழுமலை மகன் அய்யப்பன் (13). வளவனூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இதே பகுதியைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் மகன் கவின் (12). இவா், வளவனூரில் உள்ள தனியாா் மெட்ரிக் பள்ளியில் 6-ஆம் வகுப்பு பயிடித்து வருகிறாா். இருவரும் நண்பா்கள். அய்யப்பன் புதன்கிழமை தனது சைக்கிளில் கவினை அமர வைத்துக்கொண்டு விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் சென்றாா். வளவனூா் வி. தொட்டி பகுதியில் உள்ள தனியாா் பள்ளி அருகே சென்றபோது, பின்னால் வந்த அரசுப் பேருந்து சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் சைக்கிளில் சென்ற மாணவா்கள் இருவரும் பலத்த காயமடைந்தனா். இவா்களில் அய்யப்பன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். கவின் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின்பேரில், அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் பணிமனையில் பணிபுரியும் புதுச்சேரி வில்லியனூா், மேல் திருகாஞ்சியைச் சோ்ந்த ராமநாதன் மகன் ரூபக் (36) மீது வளவனூா் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.