விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி கூட்டரங்கில், புதுமைப்பெண் திட்ட விரிவாக்கத்தின் கீழ் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவியர்களுக்கு ரூ. 1,000 ஊக்கத்தொகை பெறும் திட்டம் தொடங்கப்பட்டது. விழாவிற்கு கலெக்டர் பழனி தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் மஸ்தான், லட்சுமணன், மணிக்கண்ணன், சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்து, அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் பயின்று, தற்போது உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 ஊக்கத்தொகை பெறுவதற்கான வங்கி பற்று அட்டையினை வழங்கினர்.
அப்போது கலெக்டர் கூறியதாவது: அரசு பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை தமிழ்வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தினை முதல்வர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அரசு உதவிபெறும் பள்ளிகளில், தமிழ்வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவியர்களுக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவியர்களுக்கும் மாதம் ரூ. 1,000 வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில், 65 கல்லூரிகளிலிருந்து 1,248 மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வீதம், ரூ. 12,48,000 நிதி உதவி வழங்கப்படவுள்ளது என்று கலெக்டர் தெரிவித்தார்.