விழுப்புரத்தில் உள்ள மாவட்ட போலீஸ் தலைமை அலுவலக கூட்டரங்கில், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் போலீஸ் துறையினருக்கான ஆய்வுக் கூட்டம் நேற்று (டிச.20) காலை நடந்தது.
தமிழக டி.ஜி.பி., சங்கர்ஜிவால் ஆய்வு மேற்கொண்டார். வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரகார், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., திஷாமிட்டல், எஸ்.பி.,க்கள், விழுப்புரம் தீபக்சிவாச், கடலூர் ராஜாராம், கள்ளக்குறிச்சி ரஜத்சதுர்வேதி மற்றும் டி.எஸ்.பி.,க்கள் பங்கேற்றனர். அவர்களுடன் டி.ஜி.பி., கலந்தாய்வு மேற்கொண்டார். அப்போது, மூன்று மாவட்டங்களில் தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலவரம், குற்ற வழக்குகளின் நிலவரங்கள், விபத்து வழக்குகள், கைது நடவடிக்கைகள், கள்ளச்சாராயம், போதைப்பொருள் புழக்கம், போக்குவரத்து பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்தார்.
ரவுடிகள் ஒடுக்கம், குற்ற வழக்குகளில் கைது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரவும், அதிகரித்து வரும் கள்ளச்சாராயம், கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து, சரகத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு வெகுமதி வழங்கி பாராட்டினார். மீண்டும் மாலை ஆய்வுக் கூட்டம் நடந்தது. முன்னதாக, எஸ்.பி., அலுவலக வளாகத்தில் டி.ஜி.பி., மரக்கன்று நட்டார். கலெக்டர் பழனி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.