புதுச்சேரி வில்லியனூர், ஒதியம்பட்டு ரோட்டைச் சேர்ந்த லியோ ஆதித்யன் (16) ரெட்டியார்பாளையம் தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இவர், (டிசம்பர் 16) மாலை தனது நண்பரான ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்த அந்தோணி என்பவருடன் வில்லியனூர் அருகேயுள்ள செல்லிப்பட்டு சங்கராபரணி ஆற்றில் சமீபத்திய மழை மற்றும் வீடூர் அணை திறப்பு காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கைச் சென்று பார்வையிட்டுள்ளனர். பின்னர், இருவரும் சங்கராபரணி ஆற்றின் தடுப்பணையில் இறங்கி குளித்தபோது, எதிர்பாராத விதமாக இருவரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதைக் கண்ட அருகில் இருந்தவர்கள் உடனடியாக அந்தோணியை மீட்டு, உசிலம்பட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், லியோ ஆதித்யன் தண்ணீரில் மூழ்கி மாயமானார். தகவலறிந்த திருக்கனூர் இன்ஸ்பெக்டர் ராஜகுமார், சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் ஆற்றில் மூழ்கி மாயமான லியோ ஆதித்யனைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில் இரண்டு நாட்களுக்குப் பிறகு செல்லிப்பட்டு மேம்பாலத்தின் அருகே மாணவனின் சடலம் மீட்கப்பட்டது.