விழுப்புரத்தில் கம்பன் விழாவையொட்டி அரசு பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டி நடந்தது.
விழுப்புரம் கம்பன் கழகம் சார்பில், 41ம் ஆண்டு கம்பன் விழா ஆக. 2ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. அதனையொட்டி, அரசு பள்ளி மாணவர்களுக்கான பேச்சு போட்டி நேற்று முன்தினம் நடந்தது.
விழுப்புரம் நகராட்சி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த பேச்சுப்போட்டி தேர்வுக்கு கம்பன் கழகத் தலைவர் தனபால் தலைமை தாங்கினார்.
பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தன் வரவேற்றார். கம்பன் கழக துணைத் தலைவர் செந்தில் முன்னிலை வகித்தார். கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்ற செயலாளர் மாதவகிருஷ்ணன் நடுவராக இருந்து, 'கம்பராமாயண கதாபாத்திரத்தின் சிறப்புகள்' என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி தேர்வை நடத்தினர்.
போட்டியில், கொண்டங்கி அரசு உயர்நிலைப்பள்ளி, பெரும்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளி, நன்னாடு அரசு உயர்நிலைப்பள்ளி, விழுப்புரம் நகராட்சி அரசு உயர்நிலைப் பள்ளி, பூந்தோட்டம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். போட்டிகள் பல சுற்றுகளாக நடத்தப்பட்டது.
போட்டியில் தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு வரும் 2ம் தேதி நடைபெறும் கம்பன் விழாவில் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
கம்பன் கழகத் துணைச் செயலாளர் பரமசிவம் நன்றி கூறினார்.