கொழுவாரி சமத்துவபுரத்தில் ஆதிதிராவிடர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, புதியதாக 10 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு: வானுார் ஒன்றியம் கொழுவாரி ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள சமத்துவபுரத்தில் கடந்த 2022 ஏப்ரல் மாதம், 100 பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டது. அதில், நிரந்தரமாக குடி பெயராத 10 பயனாளிகளின் வீடுகள் ஒதுக்கீடு ஆணை ரத்து செய்யப்பட்டு, அதற்கு புதிய பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளது. இதில், ஆதிதிராவிடர் வகுப்பினருக்கு 8 வீடுகளும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 2 வீடுகளும் என மொத்தம் 10 வீடுகளை ஒதுக்கீடு செய்திட, கொழுவாரி ஊராட்சியில் நிரந்தரமாக வசிக்கும் பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசாணைப்படி அரசு விதிகளுக்குட்பட்டு, கொழுவாரி ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள சமத்துவபுரத்தில், பயனாளிகள் கீழ்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பயனாளிகள் கொழுவாரி ஊராட்சியில் நிரந்தரமாக வசிப்பவராகவும், அவர்கள் வசிக்கும் வீடு மண்சுவர் உள்ள கூரை வீடாகவும், கல் சுவர் உள்ள கூரை வீடாகவும், மண்சுவர்உள்ள ஓடுவேயப்பட்ட வீடாகவும், செங்கல் சுவர் உள்ள ஓடு வேயப்பட்ட வீடு ஆகியவற்றில் குடியிருப்பவராகவும், ஏழைகளாகவும் இருக்கவேண்டும். சிமென்ட் கான்கிரீட் வீடுகளில் வசிப்பவர்களுக்கு சமத்துவபுர வீடுகள் பெற தகுதி இல்லை. இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம்,
பிரதமர் குடியிருப்பு திட்டம் அல்லது அரசினால் வழங்கப்படும் இதரவீட்டு வசதி திட்டங்களில் பயன் பெற்றவர்கள் சமத்துவபுரம் வீடு பெற தகுதியில்லை. வானுார் தாசில்தாரிடமிருந்து பெறப்பட்ட சாதி சான்று, வருமானச் சான்று மற்றும் இருப்பிடச் சான்று பெற்று விண்ணப்பத்துடன், இதர ஆவணங்களுடன், ஆதிதிராவிடர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தினை, நேரில் வானுார் ஒன்றிய அலுவலகத்தில்
வேலை நேரத்தில் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பம் வரும் 26. 5. 2023 பிற்பகல்4: 00 மணிவரை பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.