விழுப்புரம் ஸ்ரீ ஜெயேந்திர சரவஸ்தி மணி விழா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி ஷர்மிளா; விவசாய குடும்பத்தில் பிறந்த இவர், மாவட்ட அளவிலான 200 மீட்டர் ஓட்டத்தில், இரண்டாமிடம், ேஹண்ட் பால் போட்டியில் முதலிடம் பிடித்துள்ளார். இதேபோல் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ரக்பி போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்றுள்ளார். இதே பள்ளியைச் சேர்ந்த பிளஸ்2 மாணவர்கள் அஸ்விந்திரன், தினேஷ் ஆகியோரும், ரக்பி போட்டியில் தமிழக அளியில் இடம்பெற்றனர். இருவரும், தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று சாதனை படைத்துள்ளனர். மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் அஸ்விந்திரன் முதலிடம் பிடித்துள்ளார். மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டியில் தினேஷ் முதலிடத்தை வென்றுள்ளார். இதே பள்ளி மாணவர் அருள் செல்வம், மாவட்ட அளவிலான ஜூடோ போட்டியில் முதலிடத்தை பிடித்துள்ளார். மேலும், மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இவர்களுக்கு பயிற்சி அளித்த பள்ளியின் உடற்கல்வி இயக்குநர் தமிழ்மணி கூறுகையில், கடந்த கல்வி ஆண்டில் மட்டும், மாநில அளவிலான விளையாட்டு மற்றும் தடகளப் போட்டிகளில், எங்கள் பள்ளியைச் சேர்ந்த 123 மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர். தொடர் முயற்சி மற்றும் பயிற்சி மூலம் வரும் காலங்களில் தேசிய அளவிலான போட்டிகளிலும் எங்கள் மாணவர்களின் சாதனைகளை எதிர்பார்க்கின்றோம் என்றார்.