விழுப்புரத்தில் காவல் துறை பெண் நிர்வாக அலுவலர் வீட்டில் 40 சவரன் நகை கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விழுப்புரம், சாலமேடு என். ஜி. ஓ. , காலனி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் மனைவி சாந்தி, 50; இவர், உளுந்துார்பேட்டையில் 10வது பட்டாலியன், காவல் படை அலுவலக நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் புதுச்சேரியில் அரசு பணியில் உள்ளார். இருவரும் வழக்கம் போல் வேலைக்குச் சென்றுவிட்டு, நேற்று முன்தினம் இரவு 9: 00 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்தபோது, கதவுகள் உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 40 சவரன் நகை மற்றும் 1 லட்சம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், நேற்று விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.