விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல், 276 ஓட்டுச்சாவடி மையங்களில், இன்று காலை 7. 00 மணி முதல் மாலை 6. 00 மணி வரை நடைபெற உள்ளது. ஆண் வாக்காளர்கள் -1, 16, 962, பெண் வாக்காளர்கள்- 1, 20, 040, இதரர் 290 என மொத்தம் 2, 37, 031 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். தொகுதியில் 44 பதற்றமான ஓட்டுச்சாவடிகள் உட்பட மொத்தம் 276 ஓட்டுச்சாவடி மையங்களில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், முக்கிய ஓட்டுச் சாவடி மையம் அமைந்துள்ள பள்ளி வளாகங்களின் வெளிப்புறங்களில் 99 இடங்களில் கண் காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் வாயிலாகவும், கலெக்டர் அலுவலகம் மற்றும் விக்கிரவாண்டி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களிலிருந்தும் கண்காணிக்கப்படும். இத்தேர்தலுக்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (பேலட் யூனிட்) 552ம், வாக்குப்பதிவுக் கருவிகள் (கன்ட்ரோல் யூனிட்) 276 மற்றும் 276 வாக்கினை சரி பார்க்கும் விவிபாட் கருவிகளும் பயன்படுத்தப்பட உள்ளன. ஓட்டுச்சாவடி மையங்களில், தேர்தல் பணிபுரிய தலா ஒரு ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர், ஓட்டுச்சாவடி 4 அலுவலர்கள் -உள்ளிட்ட பணிகளுக்கு மொத்தம் 1, 355 அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
எனவே, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் நேர்மையாகவும், அமைதியாகவும் நடைபெறவும், அனைத்து வாக்காளர்களும்100 சதவீதம் ஓட்டளிக்குமாறு கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.