வானுார் அடுத்த ஒட்டை ஊராட்சியில் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொது மக்கள் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த கோவிலில் விரைவில் திருவிழா நடத்தவும் அப்பகுதி மக்கள் ஏற்பாடுகள் செய்து வருகின்றன. இதையொட்டி, நேற்று நூறுநாள் வேலை திட்டத்தின் கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், அப்பகுதியில் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, கோவிலுக்கு செல்லும் வழியில் தனி நபர் ஒருவர் தனது வீட்டின் எதிரில் ஆக்கிரமித்து, விறகுகள் அடுக்கி வைத்திருந்துள்ளார்.
அதனை பணியாளர்கள் அகற்றியுள்ளனர். அதில் இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள், தனி நபர் ஆக்கிரமித்து இடத்தை மீட்டு தரக்கோரி நேற்று திடீரென தாலுகா அலுவலகம் முன்பு காலை 11;30 மணிக்கு திரண்டு, அந்த பெண்ணின் செயல்பாட்டை கண்டித்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் தாசில்தார் நாராயணமூர்த்தி, வானுார் இன்ஸ்பெக்டர் சிவராஜன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் ஆக்கிரமிப்பு இடத்தை அகற்றுவதற்கு, வரும் 7 ம் தேதி சமரசக்கூட்டம் நடத்தி, அதன் பிறகு இடத்தை மீட்டு தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதை ஏற்க மறுத்த பெண்கள், மயிலம் ரோட்டில் திடீரென சாலைமறியலில் ஈடுப்பட்டனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து பேசி, அங்கிருந்து கலைய செய்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.