புதுச்சேரி கோரிமேடு அடுத்த தமிழக பகுதியான கலைவாணர் நகர், ஸ்ரீராம் நகர் பகுதிகளில் ஏராளமான குடியிருப்புக்கள் உள்ளன.
விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் இறந்தால், மாட்டுக்காரன்சாவடி பகுதியில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்து வந்தனர். இதனிடையே, உடலை எரிப்பதால் பாதிப்பு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அப்பகுதி குடியிருப்போர் நலச்சங்க செயலாளர் ஜெபாசிங் மூலம் சென்னை ஐகோர்ட்டில் தடை உத்தரவு பெற்றுள்ளனர். இந்நிலையில், கலைவாணர் நகரை சேர்ந்த ராஜாராம் மனைவி ஜெயலட்சுமி, (70); என்பவர் நேற்று இறந்தார். அவரது உடலை நேற்று (டிச.22) மாலை 4:30 மணிக்கு, மாட்டுக்காரன்சாவடி இடுகாட்டிற்கு எடுத்து சென்றனர். அப்போது, கோர்ட் தடை உத்தரவு பெற்றுள்ளதாக கூறி தடுத்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தகவலறிந்த கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., உமாதேவி, தாசில்தார் நாராயணமூர்த்தி, வானூர் பி.டி.ஓ., கார்த்தியகேயன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின்போது, இரு தரப்பினரும் போலீசார் முன்னிலையில் மோதிக்கொள்ளும் சூழல் ஏற்பட்டது. அப்போது, கடந்த சில ஆண்டுகளாக நாங்கள், இப்பகுதியில்தான் உடலை அடக்கம் செய்து வருகிறோம் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள், போலீஸ் தடையை மீறி இடுகாட்டில், உடலை தகனம் செய்தனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.