விழுப்புரம் அடுத்த கண்டியமடை கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் லட்சுமணன், 26; ஜே.சி.பி., டிரைவர். இவரது அண்ணன் புஷ்பராஜ், 30; என்பவருக்கு, கடந்த 9ம் தேதி திருமணம் நடந்தது. குடும்பத்தினர், திருமணத்திற்கு சென்றுவிட்டனர். லட்சுமணன் வீட்டில் உறவினர்கள் தனலட்சுமி, 65; மூதாட்டி தனம்மாள், 75; மட்டும் இருந்தனர். அப்போது, வீட்டிற்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர், உறவினர் என கூறி அறிமுகமாகி வீட்டிற்குள் சென்றார்.
வீட்டிலிருந்த தனலட்சுமி, மூதாட்டி தனம்மாளிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே, வீட்டின் பீரோவை திறந்து, அதிலிருந்த 2 சவரன் தங்க நகைகள், ரூ.40 ஆயிரம் ரொக்க பணத்தை திருடிச் சென்றார். லட்சுமணன் கொடுத்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து, நூதன முறையில் திருடிய மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.